Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர். தொடர்ந்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விரிவாக படிக்க
47 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இத்தாலி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 47 வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை எதிர்கொண்ட இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் சின்னர் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். இதன் மூலம் 2-0 என முன்னிலை பெற்றதோடு ஒரு எட்டாம் எஞ்சியுள்ள நிலையிலேயே பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது. 1960, 1961 மற்றும் 1977க்குப் பிறகு இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நான்காவது டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியாக இது அமைந்த நிலையில், 1976க்கு பிறகு இத்தாலி முதல் முறையாக டேவிஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
2024இல் தல தோனி விளையாடுவது உறுதி; எக்ஸ் தளத்தில் அறிவித்த சிஎஸ்கே
ஐபிஎல் 2024ல் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்குவார் என அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. 2010, 2011, 2018, 2021, மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்த எம்எஸ் தோனி, வரவிருக்கும் தொடரில் இடம்பெற விரும்புவாரா என்று ஆரம்பத்தில் உறுதியாக தெரியவில்லை. கடந்த சீஸனின் முடிவில் அவரது எதிர்காலம் குறித்து கேட்டதற்கு எம்எஸ் தோனி எதையும் உறுதியாக தெரிவிக்காமல் நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார். இந்நிலையில், ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 26 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், எம்எஸ் தோனி சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி; ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுவது குறித்த பேச்சுக்கள் இருந்தபோதிலும், குஜராத் டைட்டன்ஸ், நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை அணியில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களின் தொடக்க ஐபிஎல் சீசனில் வெற்றிபெறச் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். மேலும் அடுத்த ஆண்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டியை எட்டியது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸிடம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி தோல்வி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியான லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங்கிடம் போராடி தோல்வியடைந்தது. ஒரு மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், இந்திய ஜோடி 19-21 என்ற கணக்கில் முதல் கேமை இழந்த நிலையில் மீண்டெழுந்து இரண்டாவது கேமை 21-18 என்ற கணக்கில் வென்றது. எனினும், மூன்றாவது கேமை கடுமையாக போராடினாலும் 19-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவியது.