INDvsAUS 2வது டி20 : 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷான் 52 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் அபார பந்துவீச்சு
236 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின் மார்கஸ் ஸ்டோனிஸ் 45 ரன்களும் டிம் டேவிட்37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கியவர்களில் கேப்டன் மேத்யூ வேட் தனி ஒருவராக கடைசி வரை அவுட்டாகாமல் 42 ரன்கள் சேர்த்தாலும், மற்ற வீரர்கள் கைகொடுக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.