Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 28) இந்தியாவுக்கு பதக்க வேட்டை தொடர்ந்தது.
துப்பாக்கி சுடும் வீரர்களான சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் நாட்டின் ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் வுஷூ வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளி வென்றார்.
அனுஷ் அகர்வாலா வெண்கலம் வென்று, தனிநபர் குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார்.
இதன்மூலம், மொத்தமாக 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
India squad for ODI World Cup 2023
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப்பட்டியல் வெளியீடு
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் இறுதிப்பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக அணியிலிருந்து, ஆசிய கோப்பையின்போது காயமடைந்த அக்சர் படேல் நீக்கப்பட்டு, அஸ்வின் ரவிச்சந்திரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அஸ்வின் ரவிச்சந்திரன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.
India football team knocked out of asian games
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி தோல்வி
வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கால்பந்து ஆட்டத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.
இந்திய அணி சவூதி அரேபியாவை எதிர்கொண்ட நிலையில், இரு அணிகளும் கடுமையாக போராடியதால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்க முடியாமல் சமநிலையில் இருந்தது.
எனினும், இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக களமிறங்கிய சவூதி அரேபியா 51 மற்றும் 57வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா கடைசியாக 2010இல் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறி ஜப்பானிடம் தோற்று வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
India hockey team bets japan
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை இந்திய ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் இளம் ஸ்ட்ரைக்கர் அபிஷேக் இரண்டு ஃபீல்டு கோல்களையும், மந்தீப் சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஜப்பான் அணி கடைசி வரை கோல் அடிக்க திணறிய நிலையில், போட்டியின் கடைசி ஐந்து நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தது.
இதன் மூலம் இந்திய அணி ஜப்பானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சனிக்கிழமை எதிர்கொள்கிறது.
Naveen-ul-haq announces retirement
ஆப்கான் கிரிக்கெட் வீரர் நவீன்-உல்-ஹக் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன்-உல்-ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துளளார்.
அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள நவீன்-உல்-ஹக், ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தனது கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடராக இருக்கும் என கூறியுள்ளார்.
டி20 மற்றும் பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், உலகின் திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படும் நவீன்-உல்-ஹக் திடீரென ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.