Sports Round Up: பத்தாம் நாளில் 9 பதக்கங்கள்; நிறைவடைந்த உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாம் தர ஆண்கள் கிரிக்கெட் அணியை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறது பிசிசிஐ. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தங்கம் வெண்று அசத்தியது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச் சுற்றுகள் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் நேபாள அணி வீழ்த்தி இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதிச் சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கின்றன. இன்று மேலும் இரண்டு காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், அவற்றில் வெற்றி பெறும் அணிகளுடன் அரையிறுதியில் மோதவிருக்கின்றன இந்தியாவும், பாகிஸ்தானும்.
தடகளப் போட்டிகளில் இந்தியா:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10ம் நாளான நேற்று மட்டும் தடகள விளையாட்டுக்களில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. ஆண்களுக்கான ட்ரிபிள் ஜப்ம் மற்றும் பெண்களுக்கான 400மீ தடை தாண்டு ஓட்டப் போட்டிகளில் இந்திய அணியின் பிரவீன் சித்ரவேல் மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகிய இருவரு் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான 800மீ ஓட்டம் மற்றும் டெக்கத்லான் போட்டிகளில் இந்தியாவின் முகமது அஃப்சல் மற்றும் தேஜஸ்வின் சங்கர் ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றனர். பெண்களுக்கான 5000மீ ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் பருல் சௌத்ரி மற்றும் அண்ணு ராணி ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கின்றனர்.
குத்துச்சண்டை மற்றும் கனோயிங் போட்டியிலும் பதக்கங்கள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான கனோ இரட்டையர் 1000மீ ஸ்பிரின்ட் போட்டியில் பங்கேற்ற அர்ஜூன் சிங் மற்றும் சுணில் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது. அதேபோல் குத்துச்சண்டையில் ஆண்களுக்கான 92 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கணை ப்ரீத்தியும் அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். நேற்று மட்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
ஒருநாள் உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்:
நாளை தொடங்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று மூன்று போட்டிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் தடைப்பட்டாலும், DLS முறைப்படி இலக்கும் ஓவர்களும் குறைக்கப்பட்டு முழுமையாக நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது ஆஃப்கானிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி பயிற்சிப் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது ஆஸ்திரேலியா. திட்டமிடப்பட்டிருந்த 10 பயிற்சிப்போட்டிகளில் 3 பயிற்சிப் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இந்தியா ஒரு பயிற்சிப்போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10ம் நாளான நேற்று 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது இந்தியா. இத்துடன் இந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கம், 26 வெள்ளி மற்றும் 28 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது இந்தியா. 161 தங்கம், 90 வெள்ளி மற்றும் 46 வெண்கலம் என 297 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் கோலோச்சி வருகிறது சீனா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக, 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலம் உட்பட 70 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா.