Sports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; இந்திய கால்பந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 16) நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டேவிட் மில்லர் மட்டும் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நவம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
India beats Kuwait in FIFA 2026 World Cup AFC Qualifiers
ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்தை வீழ்த்தியது இந்திய கால்பந்து அணி
வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் குவைத்தை தோற்கடித்தது.
குவைத்தில் உள்ள ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின.
இந்நிலையில், இந்திய அணியின் மன்வீர் சிங் 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
அதன் பின்னர் குவைத் கடைசி வரை கோல் அடிக்காத நிலையில், இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா தனது அடுத்த போட்டியில், நவம்பர் 21ஆம் தேதி புவனேஸ்வரில் ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொள்கிறது.
Mohammad Hafeez appointed as Pakistan Cricket Team's Director
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முகமது ஹபீஸ் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய இயக்குனராக அந்த அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹபீஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் லீக் கட்டத்தில் பரிதாபமாக தோற்று வெளியேறிய பிறகு தேசிய அணியை மறுவடிவமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹபீஸ் ஒரு பயிற்சியாளராகவும் பணியாற்றுவார் என்றும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கு அணியின் புதிய துணை ஊழியர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்கும் போது அவருடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு இயக்குனரை நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Prannoy exits in secound round of Japan Masters
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பிரணாய் எச்.எஸ் அதிர்ச்சித் தோல்வி
ஜப்பான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ்., சீன தைபேயின் சௌ தியென் சென்னிடம் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ், முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இந்த தொடரில்தான் மீண்டும் ஆட்டத்திற்குத் திரும்பி இருந்தார்.
73 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரணாய் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினாலும், அடுத்தடுத்த செட்களை 16-21, 19-21 என இழந்தார்.
இந்நிலையில், பிரணாய் தோல்வியானது ஜப்பான் மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய வீரர்களின் பதக்க வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
David Warner equals Sachin Tendulkar, Rohit Sharma record
சச்சின், ரோஹித்தின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்
வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் டேவிட் வார்னர் இரண்டு வெவ்வேறு ஒருநாள் உலகக்கோப்பை சீசன்களில் 500 ரன்கள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.
முன்னதாக, டேவிட் வார்னர் கடந்த 2019 உலகக்கோப்பை சீசனில் 647 ரன்களைக் குவித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தியர்கள் சச்சின் டெண்டுல்கர் (1996 மற்றும் 2003) மற்றும் ரோஹித் ஷர்மா ( 2019 மற்றும் 2023) மட்டுமே இந்த சாதனையை செய்தவர்களாக இருந்தனர்.