ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
நேற்று மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஷிவம் துபேவின் அபார பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக இந்தியா அணி இந்த போட்டியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
மூன்று போட்டிகள் அடங்கிய இந்த டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி, சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்திறங்கியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
card 2
கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய சாட்விக்-ஷிராக்; அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி இணை, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதினார்.
இதில் ஸ்ரீகாந்த் 13-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.
மறுபுறம், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
card 3
ஒலிம்பிக் 2024 தகுதி சுற்று: துப்பாக்கி சுடுதலில் 16 பேர் தகுதி பெற்று சாதனை
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.
அதில், இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 16 பேர் தகுதிபெற்று சாதனை புரிந்துள்ளனர் . இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 15 பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
card 4
ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி: தங்கம் வென்றார் அமன் ஷெராவத்
குரோஷியா நாட்டின் தலைநகரான ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது.
தரவரிசை தொடரான இதில் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் வான்ஹாவோ சூ உடன் மோதினார்.
இதில் அமன் ஷெராவத் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.