ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்திருந்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. அதற்கு கரணம்- உரிய நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது என அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் இந்த இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும், ஒலிம்பிக் மற்றும் பிற முக்கிய தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும், அனைத்து மல்யுத்த வீரர்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல்: இஷா, மதீனனுக்கு தங்கப் பதக்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர்ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில் 251.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாம்பவி ஷிர்சாகர் 227.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். அதேபோல, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் வென்றுள்ளது. உமாமகேஷ் மதீனன் இறுதி சுற்றில் 252.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். பார்த் மானே 250.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அஜய் மாலிக் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா: தமிழக மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும், தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக ஆடவர் அணி, கால் இறுதி சுற்றில் தமிழக அணி, புதுச்சேரியிடம் தோல்வி அடைந்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. எனினும், மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. லீக் சுற்றில் தமிழக மகளிர் அணி கோவா, அருணாச்சல் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து கால் இறுதியில் கர்நாடகாவை தோற்கடித்து, பின்னர் நடைபெற்ற அரை இறுதி சுற்றில் தமிழக மகளிர் அணி புதுச்சேரியிடம் தோல்வி கண்டது.
ரஞ்சி டிராபி கட்டாயம்: உத்தரவிட்ட பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்வதேசப் பணிகளில் பங்கேற்காத அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெறாத அதன் வீரர்களுக்கு ஒரு உத்தரவிட்டுள்ளது. தேசிய அணிக்காக விளையாடாத, அனைத்து உடல் தகுதியுள்ள வீரர்களும், தங்கள் அணிகளுக்காக ரஞ்சி டிராபியில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக நல்ல உடல்தகுதியுடன் இருந்தும், ரஞ்சி கோப்பையில் விளையாட தயங்கும் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷானின் நடவடிக்கை குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில் இந்திய வாரியத்திடம் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது.