Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஸ்டார் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக, கடந்த இரண்டு சீசன்களாக அந்த அணியை சிறப்பாக வழி நடத்தி, இரு முறையும் இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்றிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. மேலும், கேப்டனாக அறிவிக்கப்பட்ட முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்று காட்டியிருக்கிறார். இந்நிலையில், ரூ.15 கோடி சம்பளத்துடன் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்:
34 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், கடைசியாக இந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருக்கிறார். 2015ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டிகளிலும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானவர் இமாத் வாசிம். "சமீபமாக என்னுடைய ஓய்வு குறித்து அதிகம் சிந்தித்து வந்தேன். இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன். கடந்த ஆண்டுகளில் எனக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் அவர்.
2024ல் ஐபிஎல்லில் பங்கெடுக்க ஆர்வம் காட்டியிருக்கும் வெளிநாட்டு வீரர்கள்:
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று துபாயில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெளிநாட்டு வீரர்கள் சில 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய வீரர்களும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த டேரில் மிடசல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் 2024 ஐபிஎல்லில் பங்கெடுக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இவர்களில் ரச்சின் ரவீந்திராவைத் தவிர மற்ற அனைவரும் முந்தைய ஐபிஎல் தொடர்களில் பங்கெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் இணை:
சீனாவில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடரில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராங் ஷெட்டி இணையானது நேற்று அரையிறுதியில் போட்டியிட்டது. அரையிறுதியில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த லியோ ரோலி கர்ணான்டோ மற்றும் டேனியல் மார்தின் இணையை எதிர்கொண்டது இந்திய இணை. போட்டியின் இறுதியில் இந்தோனேஷிய இணையை 21-16, 21-14 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது இந்திய இணை. இந்த இணைக்கு இது 2023ம் ஆண்டின் ஏழாவது அரையிறுதிப் போட்டியாகும். முன்னாதாக பங்குபெற்ற ஆறு அரையிறுதிப் போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2024 WPL ஏலம்:
துபாயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, பெண்கள் ப்ரீமியர் லீக்கான WPL-ன் ஏலம் டிசம்பர் 9ம் தேதியன்று மும்பையில் நடைபெறவிருக்கிறது. வெற்றிகரமான முதல் சீசனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் WPL-ன் இரண்டாவது சீசனை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது பிசிசிஐ. WPL-ன் ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக 13.5 கோடி ரூபாய் வரை செலவு செய்து கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதல் சீசனில் படுதோல்வியைத் தழுவிய குஜராத் அணி 11 வீரர்களை வெளியேற்றியதைத் தொடர்ந்து, ரூ.5.95 கோடியை கையில் வைத்திருக்கிறது. அதேபோல், குறைந்தபட்சமாக கடந்த ஆண்டின் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.1 கோடி ரூபாயை வைத்திருக்கிறது.