Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய பெண்கள் மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணி பங்குபெரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி நிர்ணயித்த 197 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய பெண்கள் அணி. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெறும் 16.2 ஓவர்களில் 80 ரன்கள் குவிப்பிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய பெண்கள் அணி. இரண்டாவது பேட்டிங் செய்த இங்கிலாந்து பெண்கள் அணியோ, 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எளிதாக சேஸ் செய்து, இரண்டாவது டி20யோடு இந்திய பெண்கள் அணியுடனான டி20 தொடரையும் வென்றது.
சிக்கந்தர் ராசாவுக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்த ஐசிசி:
அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டித்துள்ளது. லெவல் 1 வழிகாட்டுதல்களை மீறியதால் சிக்கந்தர் ராசா தொடரின் 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிக்கந்தர் ராசாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு டீமெரிட் புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஐசிசியால் சிக்கந்தர் ராசா மட்டும் தண்டிக்கப்படவில்லை. அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோரும், சிக்கந்தர் ராசாவும் மோதிக்கொண்டது தான் இந்த தண்டனைக்கு பின்னணியாகும்.
டிசம்பர் 21ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல்:
மிகவும் தாமதமாகி வரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பிற்கான தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சனிக்கிழமை (டிசம்பர் 9) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எம்எம் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை ஒரே நாளில் நடைபெறும் என்றும், ரிட் மனுவின் முடிவுகளுக்கு உட்பட்டு தேர்தல் முடிவுகள் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். ரிட் மனு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது நடைபெறும் இந்த தேர்தல், ஆகஸ்ட் 7ஆம் தேதி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்:
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் அலிசா ஹீலியை அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணியின் நீண்ட கால கேப்டன் மெக் லானிங் ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனாக சனிக்கிழமை (டிசம்பர் 9) நியமிக்கப்பட்டார். 33 வயதான அவர் கடந்த ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ள நிலையில், தற்போது முழுநேரமாக இப்பொறுப்பை ஏற்கிறார். இதற்கிடையே, 28 வயதான தஹ்லியா மெக்ராத், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக்கல் பங்கேற்ற அனுமதி:
வெள்ளியன்று (டிசம்பர் 9) ஒலிம்பிக் தலைவர்கள் அடுத்த ஆண்டு பாரிஸ் விளையாட்டுகளில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யாவுக்கு தடை விதித்த நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, ரஷ்யாவைச் சேர்ந்த 8 வீரர்களும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மட்டுமே நடுநிலை விளையாட்டு வீரர்களாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். குழு போட்டிகளில் பங்கேற்க தடை தொடரும் என மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60க்கும் மேற்பட்ட உக்ரைன் விளையாட்டு வீரர்கள் அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.