
Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி எட்டாவது முறையாக கோப்பையை வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், முகமது சிராஜின் அபார பந்துவீச்சால் 15.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களுக்கு சுருண்டது.
முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் பின்னர், 51 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
Elavenil Valarivan wins gold in ISSF World Cup
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இளவேனில் வாலறிவனுக்கு தங்கம்
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் போட்டியிட்ட இளவேனில், 8 பேர் பங்கேற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தை தக்கவைத்து தங்கம் வென்றார்.
இதன் மூலம் செப்.12 முதல் 19 வரை நடக்கும் ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியா முதல் தங்கத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும், பதக்கப் பட்டியலில் ஒரு தங்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இத்தாலி 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் முதலிடத்திலும், ஜெர்மனி ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
India beats Morocco in Davis Cup Group Stage
டேவிஸ் கோப்பை டென்னிஸ் குரூப் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி
லக்னோவில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 2 ஆட்டத்தில் மொராக்கோவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
சனிக்கிழமை (செப்,16) முதல் நாள் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளுடன் சமனில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-யூகி பாம்ப்ரி ஜோடி, ரிவர்ஸ் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் ஆகியோர் அடுத்தடுத்து மொரோக்கோ வீரர்களை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய டென்னிஸ் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள உலக குரூப் 1 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
siraj donates prize money to groundsmen
பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கி கவுரவித்த முகமது சிராஜ்
ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்ட நிலையில், தனக்கு பரிசாக கிடைத்த ரூ.4 லட்சத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்துளளார்.
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மைதானத்தை தயார்நிலையில் வைத்திருக்க கடுமையாக உழைத்த ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் இதை செய்துள்ளார்.
இதே போல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும், மைதான ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.41 லட்சம் அறிவித்துள்ளது.
England ODI Squad for WC 2023
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் இந்த அணியில் ஒரு பகுதியாக இடம்பெறவில்லை.
இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் : ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.