Page Loader
Sports Round Up : கிரிக்கெட்டைத் தொடர்ந்து டென்னிசிலும் மகளிருக்கு சம ஊதியம்; மேலும் பல முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

Sports Round Up : கிரிக்கெட்டைத் தொடர்ந்து டென்னிசிலும் மகளிருக்கு சம ஊதியம்; மேலும் பல முக்கிய செய்திகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2023
08:48 am

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சாரித் அசலங்க சதமடித்து அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் 41.1 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த நஜ்மல் ஹுசைன் சாண்டோ 90 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்தனர்.

Iga Swiatek won WTA finals title and secures No 1 in ranking

டபிள்யூடிஏ பைனல்ஸ் பட்டத்தை வென்று நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்

இகா ஸ்வியாடெக் திங்கட்கிழமை நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலாவை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார். இந்த வெற்றி ஸ்வியாடெக்கை மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 2022 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை அவர் முதலிடத்தை வைத்திருந்த நிலையில், அமெரிக்க ஓபனுக்குப் பிறகு அரினா சபலெங்காவிடம் அதை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ITF announces equal pay for women tennis players

கிரிக்கெட்டை தொடர்ந்து டென்னிஸிலும் மகளிர் வீராங்கனைகளுக்கு சம ஊதியம்

கடந்த ஜூலையில் ஐசிசி தாங்கள் நடத்தும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு சமமான பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அது தற்போது டென்னிஸிலும் எதிரொலித்துள்ளது. பில்லி ஜீன் கிங் கோப்பை பைனல்ஸ் (பிஜேகே) ஆட்டத்தில் சாம்பியன்களுக்கு 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் உட்பட மொத்தம் 9.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு திங்களன்று அறிவித்தது. இதன் மூலம், பிஜேகே கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளுக்கு டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் ஆடவருக்கு நிகரான பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

Angelo mathews becomes 1st player dismissed through time out

சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரர் ஆனார் ஏஞ்சலோ மேத்யூஸ்

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின்போது, வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங் செய்ய வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஹெல்மெட் சேதமடைந்ததால் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன் மேத்யூஸ் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நிமிட நேரத்தை விட அதிகமாக எடுத்துக் கொண்டார். வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இது குறித்து நடுவரிடம் முறையிட்ட நிலையில், அவர் தாமதமானது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் மூலம் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Punjab won maiden title of SMAT 2023

முதல்முறையாக சையது அலி முஸ்டாக் டிராபியை வென்றது பஞ்சாப்

மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற சையது அலி முஸ்டாக் டிராபி இறுதிப்போட்டியில் பரோடாவை வீழ்த்திய பஞ்சாப் அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அன்மோல்ப்ரீத் சிங்கின் (113) மற்றும் நேஹால் வதேராவின் (61) அரைசதம் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.