
Sports Headlines : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 7) 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது. இதில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் அடங்கும்.
போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியா பங்குபெறும் போட்டிகள் எதுவும் இல்லாததால், இத்துடன் இந்தியாவின் பதக்க வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர், 2018 ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் 70 பதக்கங்களை வென்றதே உச்சபட்ச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Bangladesh beats Afghanistan in ODI World Cup
ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்
சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 156 ரன்களுக்கு சுருண்டது.
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் 34.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் ஜொலித்த மெஹிதி ஹசன் பேட்டிங்கிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு தூணாக இருந்ததற்காக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
South Africa beats Srilanka in ODI World Cup 2023
ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 428 ரன்கள் குவித்தது.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியில் மூன்று வீரர்கள் சதமடித்த நிலையில், ஐடென் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் ஆனார்.
இதைத் தொடர்ந்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி போராடி 44.5 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.
BCCI plans to sell more tickets for INDvsPAK Clash in CWC 2023
ஒருநாள் உலகக்கோப்பை : இந்தியா vs பாகிஸ்தானுக்கு கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய பிசிசிஐ முடிவு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போல போற்றப்படும் நிலையில், போட்டிகளை காண மைதானங்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் மைதானங்கள் வெறிச்சோடி கிடந்தன.
இது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு கூடுதலாக 14,000 டிக்கெட்டுகளை விற்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இந்த டிக்கெட்டுகள் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
India set to clash with Australia in CWC 2023
ஒருநாள் உலகக்கோப்பை : சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிலையில், இந்திய அணி வெற்றியுடன் தொடங்குவதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை 149 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா 56 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்கி உள்ளது.
மேலும், போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.