மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,397.32 கோடி ஒதுக்கீடு!
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்டார். பட்ஜெட்டில், விளையாட்டுத் துறை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 300 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக வீரர்களை தயார்படுத்த ஏதுவாக விளையாட்டுத் துறைக்கு நிதி அமைச்சகம் ரூ.3,397.32 கோடியை இந்த முறை ஒதுக்கீடு செய்துள்ளதாக விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் 2023 : முழுமையான தகவல்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் கடந்த ஆண்டை விட 132.52 கோடி ரூபாய் அளவிற்கு அதிகமாக ரூ.785.52 கோடியைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், கேலோ இந்த ஆண்டு விளையாட்டு பட்ஜெட்டில் ரூ.1045 கோடியுடன் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இவை தவிர தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புக்கு ரூ. 325 கோடி, தேசிய சேவைத் திட்டத்திற்கு ரூ. 325 கோடி மற்றும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதிக்கு ரூ. 15 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2022-23 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகம் விளையாட்டுத் துறைக்கு ரூ.3,062.60 கோடி ஒதுக்கீடு செய்தது. இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட ரூ.300 கோடி அதிகமாகும். 2021-22 ஆம் ஆண்டில், விளையாட்டுத் துறைக்காக அமைச்சகம் ரூ.2,757.02 கோடியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.