இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு
பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. HT பங்களா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த திருட்டு குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி கங்குலி தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி, அந்த செல்ஃபோனில், 2 5ஜி சிம் கார்டுகளும் இருந்ததெனவும், அதன் மதிப்பு ரூ. 1.6 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கங்குலி தனது தொலைபேசியில் உள்ள தனது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததாக இந்தியா டுடேயின் அறிக்கை குறிப்பிடுகிறது.
சவுரவ் கங்குலியின் புகார்
"எனது தொலைபேசி வீட்டில் இருந்து திருடப்பட்டதாக நான் நினைக்கிறேன். நான் கடைசியாக ஜனவரி 19 காலை 11:30 மணியளவில் தொலைபேசியைப் பார்த்தேன்". "நான் தொலைபேசியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது தொலைபேசி தொலைந்து போனது குறித்து ஆழ்ந்த கவலை. தொலைபேசியில் பல தொடர்பு எண்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மற்றும் கணக்குகளுக்கான அணுகல் இருப்பதால், தொலைபேசியைக் கண்டறிய அல்லது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கங்குலி காவல்துறையிடம் தாக்கல் செய்த புகாரின் போது கூறியதாக HT பங்களா தெரிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இல்லத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வந்ததால் அங்கே வெளியாட்கள் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.