மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சதங்கள் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியின்போது அவர் 103 பந்துகளில் தனது சதத்தை அடித்தார். இது ஒரு வருடத்தில் மூன்று சதங்கள் என்ற அதிகாட்ச முந்தைய மகளிர் கிரிக்கெட் சாதனையை முறியடித்தது. இந்த சாதனையை பல வீரர்கள் கூட்டாக வைத்திருந்தனர். ஸ்மிருதி மந்தனா 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 96.33 சராசரியை 109 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தாலும், 299 ரன்களைத் துரத்திய இந்தியா 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்மிருதி மந்தனா புள்ளிவிபரம்
ஸ்மிருதி மந்தனா 91 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 44.84 சராசரியில் 3,812 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒன்பது சதங்களும், 27 அரைசதங்களும் அடித்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போவின் படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 மகளிர் ஒருநாள் போட்டிகளில், 38.50 சராசரியில் 616 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், நான்கு அரைசதங்களும் அடங்கும். ஜூனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதங்களும், அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் அடித்த பிறகு, ஸ்மிருதி மந்தனா இந்த ஆண்டின் நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முந்தைய சாதனையாளர்களில் மெக் லானிங், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், சோஃபி டெவின், சித்ரா அமின், ஏமி சாட்டர்த்வைட் மற்றும் பெலிண்டா கிளார்க் ஆகியோர் அடங்குவர்.