
தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா
செய்தி முன்னோட்டம்
தி ஹண்ட்ரேட் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் 100 பந்துகள் கொண்ட போட்டியான தி ஹண்ட்ரேட் லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த போட்டியில் அவர் 42 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக, அவர் இப்போது 17 ஆட்டங்களில் 35.92 சராசரியுடன் 503 ரன்கள் எடுத்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ட்ரென்ட் ராக்கெட்ஸின் நடாலி ஸ்கிவர்-ப்ரன்ட்டை (497) உள்ளார்.
smriti mandhana score most fifties in the hundred
தி ஹண்ட்ரேட் லீக்கில் அதிக அரைசதம் அடித்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
தி ஹண்ட்ரேட் லீக் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ள ஸ்மிருதி மந்தனா, அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.
வெள்ளிக்கிழமை வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்கள் எடுத்ததன் மூலம், தி ஹண்ட்ரேட் லீக்கில் தனது ஐந்தாவது அரைசதத்தை பதிவு செய்தார்.
தி ஹண்ட்ரேட் லீக்கின் நடப்பு சீசனில் ஸ்மிருதி மந்தனா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அதிக அரைசதம் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிகஸ் நான்கு அரைசதங்களுடன் உள்ளார்.