SLvsNZ : 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க சாதனை
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை 171 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா மட்டும் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. எனினும் அதன் பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க கூட்டாக 43 ரன்கள் எடுத்தனர்.
பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க
மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க கூட்டாக 43 ரன்கள் எடுத்ததன் மூலம் உலகக்கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் குவித்த ஜோடியாக ஆனது. இதற்கு முன்னர் 1983இல் இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்கள் சேர்த்த வினோதன் ஜான் மற்றும் ருமேஷ் ரத்நாயக்க ஆகியோரை அவர்கள் கடந்தனர். ஒட்டுமொத்தமாக, சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான ஜோயல் கார்னர் மற்றும் ஆண்டி ராபர்ட்ஸ் 1983இல் இந்தியாவுக்கு எதிராக 71 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். மேலும், இருவரும் 87 பந்துகளை அவுட் ஆகாமல் எதிர்கொண்டதன் மூலம் உலகக்கோப்பையில் 10வது விக்கெட்டுக்கு அதிக பந்துகளை எதிர்கொண்டவர்கள் என்ற சாதனையையும் தீக்ஷனா மற்றும் மதுஷங்க படைத்துள்ளனர்.