INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார். முன்னதாக, முதல் இன்னிங்ஸில் டக்கவுட் ஆகி வெளியேறிய ஷுப்மன் கில், தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லிற்கு ஐந்தாவது சதமாகும். இதன் மூலம் ஷுப்மன் கில் டெஸ்டில் விராட் கோலியின் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் நான்கு சதங்களுடன் உள்ள விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 5 சதங்களுடன் தற்போது ஷுப்மன் கில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் 9 சதங்களுடன் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவுக்கான டெஸ்ட் கிரிக்கட்டில் இளம் வயதில் 5 சதம்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இளம் வயதில் ஐந்து சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 19 ஆண்டுகள் 282 நாட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ரவி சாஸ்திரி 22 ஆண்டுகள் 218 நாட்களுடனும், திலீப் வெங்சர்க்கார் 23 ஆண்டுகள் 242 நாட்களுடனும், அசாருதீன் 24 வயது 3 நாட்களுடனும், மன்சூர் அலி கான் 24 ஆண்டுகள் 73 நாட்களுடனும், ரிஷப் பண்ட் 24 ஆண்டுகள் 270 நாட்களுடனும், கவாஸ்கர் 24 ஆண்டுகள் 331 நாட்களுடனும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 25 ஆண்டுகள் 43 நாட்களுடன் விராட் கோலி இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி 25 ஆண்டுகள் 13 நாட்களில் ஷுப்மன் கில் ஐந்தாவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.