
ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுக போட்டியில் சதமடித்த ஒரே இந்தியர்; சாதனையை சமன் செய்வாரா ஷுப்மன் கில்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு புதிய சகாப்தம் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இதன் மூலம் 50 ஓவர் வடிவத்தில் இந்தியாவை வழிநடத்தும் 27வது வீரர் என்ற பெருமையைப் பெறும் ஷுப்மன் கில்லுக்கு, உடனடியாகச் சாதனைப் புத்தகத்தில் தன் பெயரைப் பதிக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில், கேப்டனாகத் தான் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த பெருமைக்குரியவர் ஒரே கிரிக்கெட் வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆவார்.
இலங்கை
இலங்கைக்கு எதிராக சதம்
சச்சின் டெண்டுல்கர் 1996 ஆம் ஆண்டு கொழும்புவில் இலங்கைக்கு எதிராக 110 ரன்கள் குவித்து இந்தச் சாதனையைப் படைத்தார். ஏற்கெனவே டெஸ்ட் கேப்டன் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில், ஒருநாள் போட்டிக கேப்டன் அறிமுகத்திலும் சதமடித்தால், இந்தச் சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்திய வீரர் ஆகலாம். இதற்கிடையே, இந்தத் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில், ஏழு மாத கால இடைவெளிக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சர்வதேச மறுபிரவேசத்தையும் இது குறிக்கிறது. குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை குறித்த ஊகங்கள் நிலவும் சூழலில், மூத்த வீரர்களின் ஆட்டம், ஷுப்மன் கில்லின் புதிய தலைமையின் கீழ் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.