ரஞ்சிக் கோப்பையில் ஏமாற்றம்: பஞ்சாப் அணிக்காகக் களமிறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னில் ஆட்டமிழப்பு
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் நோக்கில், பஞ்சாப் அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் களமிறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில், வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். புதிய சண்டிகரில் உள்ள பிசிஏ மைதானத்தில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், 4-வது வீரராகக் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் 5 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்து பெவிலியன் திரும்பினார்.
சுழற்பந்து
சுழலில் சிக்கிய இந்திய கேப்டன்
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் விஹான் மல்ஹோத்ரா 26-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கில் களத்திற்கு வந்தார்.
தான் சந்தித்த இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கிய கில், 27-வது ஓவரில் சத்தீஸ்கர் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜய் மண்டலின் பந்துவீச்சை கணிக்கத் தவறினார்.
பேட்டிற்கும் பேடிற்கும் இடையே புகுந்த பந்து மிடில் ஸ்டம்பைத் தகர்த்ததில் அவர் போல்டானார்.
கில்லின் இந்த விக்கெட்டால் பஞ்சாப் அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் சுற்றைதவறவிட்ட கில், இரண்டாவது போட்டியில் அதிக நேரம் களத்தில் நின்று சிகப்புப் பந்து கிரிக்கெட்டிற்குத் தயாராகத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது விக்கெட் விரைவாக வீழ்ந்தது அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பயிற்சி ஆட்டம்
நியூசிலாந்து தொடருக்கு முன் கிடைத்த வாய்ப்பு வீண்
சர்வதேசப் போட்டிகள் இல்லாத நேரங்களில் முன்னனி வீரர்கள் தங்களது மாநில அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐயின் அறிவுறுத்தலின்படி கில் இந்த ஆட்டத்தில் பங்கேற்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து ஒருநாள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பைத் தீர்மானிக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள கில்லுக்கு, முதல் தரப் போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக இது அமைந்திருந்தது.
எனினும் சுழற்பந்து வீச்சை அதிக நேரம் எதிர்கொள்ள முடியாமல் 1 ரன்னில் அவர் வெளியேறியது, டெஸ்ட் தொடருக்கு முன்னதாகக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.