
54 ஆண்டுகளில் முதல்முறை; 500+ ரன்கள் விளாசி ஷுப்மான் கில் மற்றும் கே.எல்.ராகுல் வரலாற்றுச் சாதனை
செய்தி முன்னோட்டம்
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் 4 ஆம் நாளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் புதிய வரலாறு படைத்தனர். ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ஒரே டெஸ்ட் தொடரில் தலா 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றது. 1971 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது திலீப் சர்தேசாய் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரால் கடைசியாக இந்த சாதனை படைக்கப்பட்டிருக்க நிலையில், 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இது முறியடிக்கப்பட்டது.
போட்டி நிலவரம்
இந்தியா vs இங்கிலாந்து நான்காவது போட்டி நிலவரம்
நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சதமடித்தனர். இதையடுத்து நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் நான்காம் நாள் முடிவில் 174/2 என அணியின் ஸ்கோரை உயர்த்தி உள்ளனர். இந்தியா இன்னும் 137 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இந்தியா விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இருந்தால் போட்டி டிராவில் முடியும் வாய்ப்பு அதிமாக உள்ளது.