
கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
செய்தி முன்னோட்டம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார். முன்னதாக, 2017 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லாவில் இலங்கைக்கு எதிராக 293 ரன்கள் எடுத்து விராட் கோலி இந்த சாதனையை தக்க வைத்திருந்தார். இந்நிலையில், எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்டின் போது விராட் கோலியின் சாதனையை ஷுப்மன் கில் முறியடித்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி 269 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
போட்டி
போட்டி நிலவரம்
போட்டியைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்ததோடு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (87) மற்றும் ரவீந்திர ஜடேஜா (89) அரைசதம் விளாசினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆரம்பத்தில் தடுமாறினாலும், ஹாரி புரூக் (158) மற்றும் ஜேமி ஸ்மித்தின் (184) சதங்கள் மூலம் 407 ரன்கள் சேர்த்தது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, போட்டியின் நான்காவது நாளில், இதை எழுதும் நேரத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்து, 429 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.