
INDvsENG 2வது டெஸ்ட்: கேப்டனாக எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அசாதாரண ஃபார்மால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். முதல் டெஸ்டில் 147 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில், எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் கூடுதலாக 161 ரன்களையும் குவித்தார். அவரது அபாரமான ஸ்கோரிங், தொடரில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், அவரது பெயரை சாதனை புத்தகங்களில் பதிக்கவும் உதவியது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் கில் எட்டு சிக்ஸர்களை விளாசி, எம் எஸ் தோனியின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.
எம்எஸ் தோனி
எம்எஸ் தோனியின் முந்தைய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை எம்எஸ் தோனி முன்னர் ஆறு சிக்சர்களுடன் வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஷுப்மன் கில் அதை முறியடித்துள்ளார். இதற்கிடையே, போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா, 427 ரன்களில் டிக்ளேர் செய்து, இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. போட்டியின் நான்காம் நாள் முடிவில், இங்கிலாந்து 72/3 என்ற நிலையில் போராடி வரும் நிலையில், வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவையாக உள்ளது. இந்திய பந்துவீச்சு கடைசி நாளில் சிறப்பாக இருந்தால், இந்தியா ஒரு மிகப்பெரிய வெற்றியை இதில் பெறும் வாய்ப்பு உள்ளது.