ஐபிஎல் 2026: 35வது டி20 அரைசதம் அடித்து சாதனை! ஆட்டநாயகன் ஷுப்மன் கில் அதிரடியால் கேகேஆர் தோல்வி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசனின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். இவரது அபாரமான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆரம்பக்கட்ட தோல்விகளில் இருந்து மீண்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தற்போது தொடர் வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறி வருகிறது.
புள்ளிவிவரங்கள்
ஷுப்மன் கில்லின் அதிரடி அரைசதம்
இந்தப் போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 86 ரன்களைக் குவித்த ஷுப்மன் கில், டி20 கிரிக்கெட்டில் தனது 35வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதுவரை விளையாடிய 179 டி20 போட்டிகளில் 5,663 ரன்களை (சராசரி 37.5) அவர் எட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 122 போட்டிகளில் 4,117 ரன்களைக் குவித்துள்ள கில், இதுவரை 29 அரைசதங்களையும் 4 சதங்களையும் அடித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 5 போட்டிகளில் விளையாடி 271 ரன்களை (சராசரி 54.2) அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கில்லின் சாதனைகள்
அகமதாபாத் மைதானத்தில் ஷுப்மன் கில்லுக்கு ஒரு தனி ராசி உண்டு. அந்த மைதானத்தில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,369 ரன்களைக் குவித்துள்ளார். இங்கு அவரது சராசரி 59.52 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 165.53 ஆகும். சொந்த மண்ணில் 6 அரைசதங்கள் மற்றும் 4 சதங்களை அடித்துள்ள கில், நரேந்திர மோடி மைதானத்தை தனது கோட்டையாக மாற்றியுள்ளார். இத்தகைய சிறப்பான ஆட்டம் மூலம், அவர் தொடர்ந்து இந்த மைதானத்தில் ரன்களைக் குவித்து வருகிறார்.
ஆரஞ்சு தொப்பி
இந்த சீசனின் ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்
ஐபிஎல் 2026 தொடரில் தற்போது ஷுப்மன் கில் ஆரஞ்சு தொப்பியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் 251 ரன்களைக் குவித்து, 250 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது சராசரி 62.75 ஆகவும், இந்தச் சீசனில் இதுவரை 3 அரைசதங்களை அவர் பதிவு செய்துள்ளார். ஒரு கேப்டனாக அணியை வழிநடத்துவதோடு, பேட்டிங்கிலும் முன்னின்று செயல்படும் கில்லின் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளது.
குஜராத்
குஜராத் அணியின் வெற்றிகரமான சேஸிங்
181 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு, கில் மற்றும் சாய் சுதர்சன் (57 ரன்கள் கூட்டணி) நல்ல தொடக்கத்தை அளித்தனர். சுதர்சன் ஆட்டமிழந்த பிறகு வந்த ஜோஸ் பட்லர் 15 பந்துகளில் 25 ரன்களைச் சேர்க்க, வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து கில் 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். கில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், அதற்குக்ள் குஜராத் அணி வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துவிட்டது. இறுதியில் ராகுல் டெவாட்டியாவின் பங்களிப்போடு குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.