LOADING...
அயர்லாந்திற்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி: விராட் கோலி, ஷுப்மன் கில்லின் மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்
கேப்டனாக விராட் கோலி, ஷுப்மன் கில்லின் மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்

அயர்லாந்திற்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி: விராட் கோலி, ஷுப்மன் கில்லின் மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 27, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

அயர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தங்களது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் கேப்டன்சி போட்டியாகும். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே தோல்வியைத் தழுவிய இந்திய கேப்டன்களான விராட் கோலி, ஷுப்மன் கில் போன்றோரின் மோசமான சாதனைப் பட்டியலில் தற்பொழுது ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார்.

இலக்கு

அயர்லாந்து அணி நிர்ணயித்த இமாலய இலக்கு

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் அதிரடியாக 50 ரன்களும், காரெத் டெலானி 49 ரன்களும் குவித்ததன் மூலம், அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 182 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய கிரிக்கெட் அணி எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 148 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டனர். இந்தியத் தரப்பில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 49 ரன்களும், சிவம் துபே 25 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்திய கேப்டன்கள்

அறிமுகப் போட்டியில் தோற்ற இந்திய டி20 கேப்டன்களின் பின்னணி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தங்களது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் கேப்டனாகப் பொறுப்பேற்றுத் தோல்வியை சந்தித்த கேப்டன்களின் பட்டியல் தற்பொழுது நீண்டுள்ளது. கடந்த 2017இல் கான்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தனது முதல் கேப்டன்சி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். அவரைத் தொடர்ந்து 2022இல் டெல்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்டும், 2024இல் ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஷுப்மன் கில்லும் தங்களது அறிமுகப் போட்டிகளில் தோற்றனர். அந்த வரிசையில் தற்பொழுது 2026இல் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்று ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த மோசமான சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement

விளக்கம்

தோல்வி குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த விளக்கம்

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், போட்டியின் தொடக்கத்தில் நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளையும் வீழ்த்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால், நடுத்தர ஓவர்களில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டதாகவும், மைதானத்தின் எல்லைக் கோடுகள் சிறியதாக இருந்த பக்கவாட்டுப் பகுதிகளை நோக்கி அயர்லாந்து பேட்ஸ்மேன்களை அடிக்க விட்டதுதான் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி கம்பேக் கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Advertisement