அதிவேகமாக 25 முறை 50+ ஸ்கோர்கள்; ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர்
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 12 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பொறித்தார்.
மிடில்-ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் எட்டி ஒருநாள் போட்டிகளில் 25 ஐம்பதுக்கு மேல் ஸ்கோரை, வெறும் 60 இன்னிங்ஸ்களில் எட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை மூலம் அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 முறை 50+ ஸ்கோரை எட்டிய இந்திய வீரர் ஆனார்.
முன்னதாக விராட் கோலி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவரும் தலா 68 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி ஹைலைட்ஸ்
இந்தியா vs இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்
ஷ்ரேயாஸ் ஐயர் (78 ரன்கள்) சாதனை, ஷுப்மன் கில்லின் (112 ரன்கள்) சதம் மற்றும் விராட் கோலியின் (52 ரன்கள்) அரைசதம் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.
இதன் மூலம் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளையும் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இந்திய அணி களமிறங்க உள்ளது.