பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஐயர்லாந்தின் காதலி சோஃபி ஷைனை பிப்ரவரியில் கரம்பிடிக்கிறார்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைய உள்ளார். அவர் தனது நீண்டகால காதலியான சோஃபி ஷைனை வரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின்படி, இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. டெல்லியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த திருமண விழா நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சோஃபி ஷைன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது தவான் நடத்தி வரும் 'ஷிகர் தவான் அறக்கட்டளையின்' தலைவராக பணியாற்றி வருகிறார்.
காதல்
ஷிகர் தவான்- சோஃபி காதல் கதை
இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் சந்தித்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து (Live-in relationship) வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது, ஷிகர் தவான் தனது தோழியுடன் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதனை தொடர்ந்து, அண்மையில் இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர். ஷிகர் தவான் ஏற்கனவே ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஜோராவர் என்ற 11 வயது மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து பெற்றனர்.