இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்ததன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார். வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த இந்த போட்டியில், இலங்கை அணியின் குஷால் மெண்டிஸை 5 ரன்களில் ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 306வது விக்கெட்டை எடுத்ததோடு, இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்த வீரரான நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரியின் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தை தனதாக்கியுள்ளார். சுவாரஸ்யமாக, 323 விக்கெட்டுகளுடன் இலங்கையின் ஜாம்பவான் பேட்டர் சனத் ஜெயசூர்யா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் புள்ளிவிபரம்
தனது சிறந்த பந்துவீச்சைத் தவிர பேட்டிங்கிலும் ஷகிப் அல் ஹசன் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 236 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 37.38 என்ற சராசரியில் 7,216 ரன்களை அடித்து, வங்கதேசத்தின் மூன்றாவது அதிக ரன் அடித்தவராக உள்ளார். இந்தப் பட்டியலில் தமிம் இக்பால் 8,313 ரன்களுடன் முதலிடத்திலும், முஷ்பிகுர் ரஹீம் 7,270 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஷகிப் எடுத்துள்ள 7,216 ரன்களில் ஒன்பது சதங்கள் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இதற்கிடையே, ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக, கேப்டனாக இருந்த தமீம் இக்பால் பொறுப்பிலிருந்து விலகியதால், ஷகிப் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தி வருகிறார்.