LOADING...
4 வருடங்களுக்குப் பின் டென்னிஸ் களத்திற்குத் திரும்பிய செரீனா வில்லியம்ஸ்; முதல் போட்டியிலேயே மெகா வெற்றி
4 வருடங்களுக்குப் பின் டென்னிஸ் களத்திற்குத் திரும்பிய செரீனா வில்லியம்ஸ்

4 வருடங்களுக்குப் பின் டென்னிஸ் களத்திற்குத் திரும்பிய செரீனா வில்லியம்ஸ்; முதல் போட்டியிலேயே மெகா வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2026
07:12 am

செய்தி முன்னோட்டம்

உலக டென்னிஸ் வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சுமார் 4 ஆண்டுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் களத்திற்குத் திரும்பி வெற்றிகரமான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் 2026 குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் தனது தீவிர ரசிகையான கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த அமெரிக்க-கனடிய ஜோடி, தங்களை விட பலம் வாய்ந்த தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த எரின் ரவுட்லிஃப் (நியூசிலாந்து) மற்றும் நிகோல் மெலிச்சார்-மார்டினெஸ் (அமெரிக்கா) ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

கம்பேக்

4 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் கொடுத்த 'டென்னிஸ் ராணி'

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடருக்குப் பிறகு, டென்னிஸ் விளையாட்டில் இருந்து தான் தற்காலிகமாக விலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்திருந்தார். 23 மகளிர் ஒற்றையர், 14 இரட்டையர் மற்றும் 2 கலப்பு இரட்டையர் என ஒட்டுமொத்தமாக 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்தத் தொடருக்கு வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் தகுதி பெற்று, தனது மறுபிரவேசத்தை மாஸாகத் தொடங்கியுள்ளார். நேற்றைய போட்டியில் 44 வயதான செரீனாவிற்கும் 19 வயதான விக்டோரியாவிற்கும் இடையே 25 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது. இருப்பினும், மைதானத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மிகச் சிறந்த புரிதலுடன் விளையாடினர். வெறும் 1 மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த ஒட்டுமொத்த ஆட்டமும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement