அணியில் வாய்ப்பு மற்றும் விமர்சனங்கள் குறித்து உடைத்துப் பேசிய சஞ்சு சாம்சன்
செய்தி முன்னோட்டம்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெறும் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், அணியில் தொடக்க வீரர் இடத்திற்கான கடும் போட்டி மற்றும் வெளிபுற விமர்சனங்கள் குறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சிப் படை மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன், இரண்டாவது போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எதிர்மறை விமர்சனம்
தொடக்க வீரர் இடத்திற்கான போட்டி: "நாங்கள் வைஃபையை ஆஃப் செய்துவிடுவோம்!"
ஜிம்பாப்பவே தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக, சஞ்சய் சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறக்கப்பட்டனர்.
இது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்,"வெளியில் இருப்பவர்களுக்கு இது போட்டியாகத் தெரியலாம். ஆனால் நாங்கள் ஒரு நாட்டிற்காக விளையாடும் ஒரு அணி. 'எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவனுக்கு ஏன் கொடுத்தார்கள்' என்ற எதிர்மறை எண்ணங்கள் இங்கு வேலை செய்யாது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களைத் தவிர்க்க நான் எனது 'வைஃபையை ஆஃப்' செய்துவிடுவேன். சில நேரங்களில் மூத்த வீரர்கள் கூறும் கருத்துகள் கண்ணில் பட்டாலும், மனநிலையைத் தெளிவாக வைத்திருப்பதே முக்கியம்" என நகைச்சுவையாகவும் அழுத்தமாகவும் கூறினார்.
மன அழுத்தம்
மன அழுத்தம் மற்றும் தொடர் வாய்ப்புகள்
முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சோபிக்கத் தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன், பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் வைபவ் சூர்யவன்ஷி 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்வது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், "நாங்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல, மனிதர்கள் தான்; இதுபோன்ற விஷயங்கள் கண்டிப்பாக எங்களைப் பாதிக்கும். ஆனால் அனுபவம் எனக்கு மன அழுத்தத்தைக் கையாளக் கற்றுக்கொடுத்துள்ளது. 'அவுட் ஆகிவிட்டால் மீண்டும் வைஃபை பிரச்சனை (விமர்சனம்) வரும்' என்று யோசித்து ஆட்டத்தை அணுகினால் என்னால் இப்படி சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விளையாடுகிறேன்" என்று தெரிவித்தார்.