அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி!
செய்தி முன்னோட்டம்
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவரது அமெரிக்க ஜோடியான பெத்தானி மேடெக்-சாண்ட்ஸ் ஜோடி தோல்வியைத் தழுவி வெளியேறியது.
கிர்ஸ்டன் பிளிப்கென்ஸ் மற்றும் லாரா சீக்மண்ட் ஜோடிக்கு எதிராக நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.
திங்கள்கிழமை (பிப்ரவரி 6) இரவு ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், சானியா-பெத்தானி ஜோடி 3-6 4-6 என்ற கணக்கில் பெல்ஜியம்-ஜெர்மன் ஜோடியிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து முன்கூட்டியே வெளியேறியது.
முன்னதாக ஆஸ்திரேலியா ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில், இதில் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சானியா மிர்சா
டென்னிஸில் இருந்து சானியா மிர்சா ஓய்வு
கடந்த மாதம், மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
அவர்கள் இறுதிப் போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸிடம் தோல்வியடைந்தனர். அந்த போட்டிதான் சானியாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சானியா, பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடிய பின்னர் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.