கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு?
2023 கிரிக்கெட் ஆசியக் கோப்பைத் தொடர் (ஒருநாள்) தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான வீரர்களின் பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆசியக் கோப்பைக்கு 17 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட போதே, அதிலிருந்து 15 வீரர்களையே உலகக் கோப்பைத் தொடருக்கு பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் எனத் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதுபோலவே, ஆசியக் கோப்பை வீரர்கள் பட்டியலில் இருந்து இரண்டு வீரர்களை மட்டும் நீக்கி 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியின் பட்டியலை வெளியிடவிருக்கிறது பிசிசிஐ. மேலும், உலகக் கோப்பைக்கான வீரர்களின் தேர்வு குறித்து அணி நிர்வாகத்துடன் கலந்துரையாட, தேர்வுக் குழுத்தலைவர் அஜித் அகர்கர் தற்போது இலங்கை சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நீக்கப்படும் வீரர்கள் யார்?
ஆசியக் கோப்பைத் தொடருக்கே சஞ்சு சாம்சனை, கே.எல்.ராகுலுக்கான பேக்அப் வீரராகவே அறிவித்திருந்தது பிசிசிஐ. எனவே, உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய மூவருமே உலகக் கோப்பை வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றே தெரிகிறது. ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட பட்டியலில், அறிமுக வீரராக அறிவிக்கப்பட்ட திலக் வர்மா மற்றும் நீண்டா நாட்களுக்குப் பின்பு அணிக்குத் திரும்பிய பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அணியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.