மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு
வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை புதன்கிழமை (நவம்பர் 1) திறக்கப்பட உள்ளது. டெண்டுல்கரின் சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் மற்றும் மும்பை கிரிக்கெட் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். சச்சின் கிரிக்கெட் ஸ்ட்ரோக் விளையாடுவதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்டிற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. அகமதுநகரைச் சேர்ந்த ஓவியரும் சிற்பியுமான பிரமோத் காம்ப்ளே என்பவரால் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட சிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் மாதம் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கரின் சிலை மைதானத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சிலை அமைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த டெண்டுல்கரின் உள்ளூர் மைதானமான வான்கடே மைதானத்தில், இந்தியாவுக்கான தனது கடைசிப் போட்டியை அவர் விளையாடி ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த இறுதி ஆட்டம் நவம்பர் 2013 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது நடந்தது குறிப்பிடத்தக்கது.