
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இருக்கிறாரா? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார். செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ தேர்தலுக்கு முன்னதாக, இந்த வதந்திகள் குறித்து அவரது மேலாண்மைக் குழு வியாழக்கிழமை (செப்டம்பர் 11) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் பதவிக்குக் கருதப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவோ சில அறிக்கைகளும் வதந்திகளும் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல்
நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல்
இந்த மறுப்பு, பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னதாக வந்துள்ளது. இடைக்காலத் தலைவராக இருந்து வரும் ராஜீவ் சுக்லாவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், தலைவர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. ரோஜர் பின்னிக்கு பிறகு இடைக்கால தலைவராக பதவிக்கு வந்த ராஜீவ் சுக்லா, தலைவர் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறார். எனினும், அவர் துணைத் தலைவராகத் தொடரலாம், தலைவராகப் பதவி உயர்த்தப்படலாம் அல்லது ஐபிஎல் தலைவராகப் பொறுப்பேற்கலாம் என மூன்று சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்னதாக ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தலைவர், செயலாளர் போன்ற முக்கியப் பதவிகளுக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்.