
AFG vs SA: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியில் அனைத்து பேட்டர்களும் 25 ரன்களுக்குள்ளாக தங்களால் ஆன சிறிய பங்களிப்பை மட்டுமே செய்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஐந்தாவதாகக் களமிறங்கிய அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் மட்டும் தென்னாப்ரிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு இறுதி வரை களத்தில் நின்று 97 ரன்களைக் குவித்து அணி சராசரியான ஸ்கோரை எட்ட உதவினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களைக் குவித்தது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.
ஒருநாள் உலகக்கோப்பை
தென்னாப்பிரிக்கா நிதானமான பேட்டிங்:
தென்னாப்பிரிக்காக கிரிக்கெட் அணியானது இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் போது சிறப்பாக ஆடி அதிக ரன்களைக் குவித்திருக்கிறது. எனினும், சேஸிங்கின் போது மிகவும் சொதப்பும் அணியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்திருந்தாலும், இடையில் சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது தென்னாப்பிரிக்கா.
ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி தென்னாபிரிக்க பேட்டர்கள் எளிதாக போட்டியை முடிக்க விடாமல் சிரமம் கொடுத்தனர்.
இறுதியில் அந்த அணியின் முக்கிய பேட்டரான ராஸி வான் டர் டசன் நிலைத்து நின்று ஆட, மறுபுறம் அண்டிலே பெலுக்வயோயும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த 15 பந்துகள் மீதமிருக்கவே, 244 என்ற ஸ்கோரை சேஸ் செய்து போட்டியை வென்றது தென்னாப்பிரிக்க அணி.