மெஸ்ஸியுடன் ஒப்பீடு: போர்ச்சுகல் அணி நிர்வாகத்தை விமர்சித்த பதிவை லைக் செய்த ரொனால்டோ
செய்தி முன்னோட்டம்
அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி நடத்தப்படும் விதம் மற்றும் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ நடத்தப்படும் விதம் குறித்த ஒப்பீட்டுப் பதிவை ரொனால்டோ லைக் செய்திருப்பது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீஸஸுக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. டென்மார்க் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் ஆட்டத்திற்கு முன்னதாக, தன்னை மாற்று வீரராக அமர வைக்கப் பயிற்சியாளர் திட்டமிட்டதை அறிந்து அணியின் பயிற்சி முகாமில் இருந்து ரொனால்டோ வெளியேறினார். நார்வே அணிக்கு எதிரான போட்டியிலும் சேர்க்கப்படாத நிலையில், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்புத் தலைவருடன் பேசிய பின்னரே, முகாமில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை வெளியிடுவேன் எனவும் ரொனால்டோ தெரிவித்திருந்தார்.
மெஸ்ஸியுடன் ஒப்பீட்டு வீடியோ
ரொனால்டோ ரியாக்ஷன்
இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் வெளியான ஒரு சர்ச்சைக்குரிய பதிவை ரொனால்டோ லைக் செய்திருப்பது அணிக்குள்ளான மோதலை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பெலிப் மெலோ அளித்த பேட்டி ஒன்றில், "அர்ஜென்டினாவில் மெஸ்ஸிக்கு மிகப்பெரிய மரியாதை அளிக்கப்படுகிறது.
ஆனால் போர்ச்சுகல் அணியில் சக வீரர்களை விட எதிரணி வீரர்களே ரொனால்டோவுக்கு அதிக மரியாதை தருகின்றனர்.
வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் ஒருவரை இப்படி சாதாரணமாக அணியை விட்டு வெளியேற விடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று போர்ச்சுகல் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
இந்த வீடியோவை ரொனால்டோ தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் லைக் செய்திருப்பது இணையத்தில் பரவி வருகிறது.
ரொனால்டோவுக்கு ஆதரவு
களமிறங்கிய புருனோ பெர்னாண்டஸ்
ரொனால்டோ முகாமில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்களை போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "என்ன நடந்தாலும் போர்ச்சுகல் கால்பந்தின் மற்றும் இந்த நாட்டின் மிகச் சிறந்த அடையாளமாக ரொனால்டோ என்றென்றும் நீடிப்பார்.
வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அவருக்கு போர்ச்சுகல் மக்களின் இதயத்தில் எப்போதும் நீங்காத இடமுண்டு; அணியைப் பிளவுபடுத்திப் பேசுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்" என்று சக வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.