முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று (ஜனவரி 24), இந்திய அணியின் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி 212 ரன்கள் சேர்த்ததோடு, இருவரும் சதமடித்தனர். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் குவித்தார். இது அவருக்கு 30வது சதமாகும். இதன் மூலம் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். மறுபுறம் ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் உட்பட 112 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு 4வது சதமாகும்.
சேவாக்-காம்பிரின் 14 ஆண்டு சாதனை முறியடிப்பு
மார்ச் 2009 இல், காம்பிர் மற்றும் சேவாக் ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் சேர்த்தனர். அந்த போட்டியில் டி/எல் முறைப்படி இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காம்பிர் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், சேவாக் 74 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்தார். மேலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியில், காம்பிர் மற்றும் சேவாக் ஜோடி மட்டுமே 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது. இந்நிலையில், ரோஹித் மற்றும் ஷுப்மான் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 200+ பட்டியலில் இணைந்ததோடு, சேவாக்-காம்பிரின் சாதனையையும் முறியடித்துள்ளனர்.