டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி
ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. தலைமை மாற்றம் இந்த சீசனில் மெதுவாக நடக்கும் என ஏற்கனவே பேசப்பட்டாலும், ஐபிஎல் 2024க்கான ஏலம் தொடங்குவதற்கு முன்னதாகவே யாரும் எதிர்பாராத வகையில் தடாலடியாக நடந்துள்ளது. இந்த மாற்றம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியிலும் இந்த மாற்றம் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான முதல் தேர்வு கேப்டனாக ரோஹித் ஷர்மாவையே பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் டி20 கேப்டன் யார்?
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு, ரோஹித் ஷர்மா இதுவரை இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் இல்லாத நிலையில், டி20இல் இந்திய கிரிக்கெட் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளதால், அது இந்திய டி20 அணியிலும் அதிகாரப்பூர்வமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முடிவு இந்திய அணியில் எதிரொலிக்காது என்றும் பிசிசிஐ தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.