முதல் 2 பந்துகளில் 2 சிக்ஸர்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியா புதிய சாதனைகளை படைக்க உதவினார்கள். இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கியது. இதன் மூலம் மூன்று ஓவர்களில் 50 ரன்களை எட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்
இந்திய கிரிக்கெட் அணி ஒருபுறம் சாதனை படைத்ததோடு, ரோஹித் இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் தனது முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசிய முதல் தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். நான்காவது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தாலும், அவரது சிறப்பான தொடக்கம் இந்தியாவுக்கு வலு சேர்த்தது. இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஒரு பெரிய சாதனையை நெருங்கி வருகிறார். இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் வைத்துள்ளார். இதில் ரோஹித் ஷர்மா 87 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், விரைவில் அதை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.