டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விரக்தியைக் கிளப்பியுள்ளன. இதனால் கொந்தளித்துப் போயுள்ள ரசிகர்களில் சிலர், இருவரையும் தற்போதே ஓய்வு அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் இந்தியா சொந்த மண்ணில் முதன்முறையாக ஒயிட்வாஷை சந்தித்ததால், இந்தத் தொடர் இந்திய அணியின் இருண்ட பக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பொதுவாக இந்தியாவின் வரிசையின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ரோஹித் மற்றும் விராட் ஆகிய இரு பேட்டர்களும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோஹித் ஷர்மா, விராட் கோலியின் செயல்திறன்
ரோஹித் ஷர்மாவால் இந்த டெஸ்ட் தொடரில் 15.16 சராசரியில் 91 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதே நேரத்தில் விராட் கோஹ்லி 15.50 சராசரியில் 93 ரன்களுடன் முடித்தார். இதில் புனேவில் மட்டும் சற்று சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் பேட்டிங் சோகங்கள் காரணமாக, அணி இரண்டு முறை மட்டுமே 200 ரன்களைக் கடந்தது. பெங்களூரு டெஸ்டில் அவர்களின் மோசமான முதல் இன்னிங்ஸ் 46 ரன், சொந்த மண்ணில் இந்தியாவின் மிகக் குறைந்த ரன்களாகும். ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சில நிலையான ஆட்டக்காரர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் முயற்சியால் வரலாற்று தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
மோசமான செயல்திறன் குறித்து ரோஹித் ஷர்மா ஒப்புதல்
ரோஹித் ஷர்மா, கேப்டனாகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் செயல்படுகையில் எதிர்கொள்ளும் தனது போராட்டங்களை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் இடது கை சுழலுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான செயல்திறனை நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் மற்றும் அஜாஸ் படேல் அம்பலப்படுத்தினர். ரோஹித், கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடைசியாக இருக்கலாம் என்ற ஊகத்துடன், இந்திய மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்த இந்த ஃபார்ம் சரிவு கவலையைத் தூண்டியுள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன் உடனடி மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படாவிட்டாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.