INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்
கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். 2022 வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு விபத்தில் சிக்கி நீண்ட காலம் ஓய்வில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டுதான் விளையாட்டுக்கு திரும்பினார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே விளையாடியுள்ள ரிஷப் பண்ட், காயத்திற்கு பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இந்நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) சதமடித்துள்ளது மிகச் சிறந்த கம்பேக்காக மாறியுள்ளது. இந்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆறு சதம் நடித்துள்ள எம்எஸ் டோனியின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார்.
இந்தியா vs வங்கதேசம் முதல் போட்டி தற்போதைய நிலவரம்
ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் சதம் மற்றும் ஜடேஜா, ஜெய்ஸ்வாலின் அரைசதங்கள் மூலம் 376 ரன்கள் குவித்தது. அதே நேரம் வங்கதேசம் பும்ராவின் (4 விக்கெட்டுகள்) அபார பந்துவீசசு மூலம் 149 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் போட்டியின் இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, தற்போது மூன்றாவது நாளின் இரண்டாம் அமர்வில் 450 ரன்களுக்கும் மேல் முன்னிலையுடன் வலுவாக உள்ளது. ரிஷப் பண்ட் சதமடித்துள்ள நிலையில், மறுமுனையில் ஷுப்மன் கில்லும் சதத்தை நெருங்கியுள்ளார்.