ஐபிஎல் 2023 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் நீக்கம் என தகவல்
வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) வீரர் கேன் வில்லியம்சன் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான அணியின் தொடக்க ஆட்டத்தில் டீப் ஸ்கொயர் லெக் எல்லையில் பீல்டிங் செய்யும் போது கேன் வில்லியம்சனின் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பந்தை பவுண்டரி லைனை தாண்டி செல்வதைத் தடுக்க முயற்சி செய்தபோது இது நடந்தது. இரு அணிகளின் பிசியோவும் வில்லியம்சனை சோதனை செய்த பிறகு, அவர் விரைவில் டிரஸ்ஸிங் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜிடி இம்பாக்ட் பிளேயராக சாய் சுதர்ஷனை களமிறக்கியது.
கேன் வில்லியம்சன் விலகுவது உறுதி செய்யப்பட்டதா?
கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் அளவு இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனினும் வில்லியம்சனை பரிசோதித்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பபடுகிறது. இதற்கிடையே முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட்டின் 92 ரன்கள் மூலம் 178 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் கடைசியில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியுடன் தொடங்கியது.