WTC Final தோல்வி எதிரொலி : இரண்டு மூத்த வீரர்களுக்கு இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்க திட்டம்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இன்டீஸுக்கு செல்லும்போது இரண்டு மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.
அவர்களுக்கு பதிலாக ரஞ்சி டிராபியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெறுவர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
India west indies tour
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இந்தியாவின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2023 ஜூலை 12 அன்று இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கு பிறகு இந்த ஆண்டு டிசம்பர் வரை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட திட்டமிடப்படவில்லை. எனவே, தேர்வுக் குழு மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்காலத்தில் அணிக்கு ஏற்ற வீரர்களை உருவாக்குவதில் கவனித்து வருகின்றனர்.
டெஸ்ட் அணியில் இளைஞர்கள் மற்றும் அனுபவத்தை சமநிலைப்படுத்த இந்திய அணியில் முன்னாள் தேசிய தேர்வாளர் தேவங் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருப்பதாக கூறினார்.