ஐபிஎல் 2023 : ரோஹித் சர்மாவால் முறியடிக்க வாய்ப்புள்ள சாதனைகளின் பட்டியல்
மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் வரவிருக்கும் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. போட்டியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பேட்டர்கள் மற்றும் கேப்டன்களில் ரோஹித் ஒருவர். அவர் தற்போது 227 ஐபிஎல் போட்டிகளில் 129.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 5,879 ரன்களை வைத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 40 அரைசதங்கள் அடங்கும். ரோஹித்தின் அதிகபட்ச ஸ்கோரான 109* 2012ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. ரோஹித் இன்னும் 121 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் கோலி மற்றும் தவானுக்கு அடுத்தபடியாக 6,000 ரன்களை கடக்கும் மூன்றாவது வீரர் என்ற சாதனையை பெற முடியும்.
ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ள இதர சாதனைகள்
2011 சீசனில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்ததிலிருந்து, ரோஹித் 182 போட்டிகளில் 4,709 ரன்களை எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை முடிக்க அவருக்கு 291 ரன்கள் தேவை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் கோலி (6,624) மட்டுமே ஒரு அணிக்காக 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஐபிஎல் ரன்களைக் கொண்ட வீரராக தற்போது உள்ளார். கேப்டனாக 150 ஐபிஎல் போட்டிகளை முடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை பெற ரோஹித் சர்மா இன்னும் ஏழு ஆட்டங்களில் விளையாட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்எஸ் தோனி (210) மட்டுமே தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கிடையே கேப்டனாக ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற ஒரே வீரர் ரோஹித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.