பிரபல பிரேசில் கால்பந்து வீரரிடம் இனவெறியுடன் நடந்து கொண்ட ஐரோப்பிய ரசிகர்கள்!
ஞாயிற்றுக்கிழமை (மே 21) வலென்சியாவுக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியின்போது வினிசியஸ் ஜூனியர் ஒரு பிரிவு ரசிகர்களால் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து, ரியல் மாட்ரிட் இனவெறிக்கு எதிராக அரசிடம் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட ரியல் மாட்ரிட் இந்த சம்பவத்தை வெறுப்பு குற்றமாக கருதுவதாகவும், சம்பவத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளது. கால்பந்து உலகின் மிக திறமையான வீரர்களில் ஒருவரான வினிசியஸ் ஜூனியர் தென்னமெரிக்க நாடான பிரேசிலின் முன்கள வீரர் ஆவார். ஐரோப்பிய லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர் லா லிகாவில் இனரீதியான துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து உலகில் தொடரும் இனவெறி சர்ச்சை
வினிசியஸ் ஜூனியர் துரதிர்ஷ்டவசமாக ஸ்பெயினில் இருந்த காலத்திலும் இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவங்கள் கால்பந்திலும் சமூகத்திலும் ஆழமாக வேரூன்றிய இனவெறி பிரச்சினையை எடுத்துக்காட்டுகின்றன. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினிசியஸ் இத்தகைய துன்பங்களை தைரியமாக எதிர்கொண்டதோடு, பொது மேடைகளிலும் பலமுறை இந்த பிரச்சினையை பற்றி பேசியுள்ளார். லா லிகா ஒரு காலத்தில் ரொனால்டினோ, ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்களுக்கான இடமாக இருந்த நிலையில், இப்போது அது இனவெறியர்களுக்கு சொந்தமாக மாறிவிட்டதாக கால்பந்து உலகில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.