5,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் : கபில் தேவின் சாதனையை சமன் செய்த ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா புதன்கிழமை (மார்ச் 1) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இந்திய ஆல்ரவுண்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 500 விக்கெட்டுகளை தொட்டார். ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா தற்போது முதலிடத்தில் உள்ளார். ஜடேஜாவுக்கு முன்னதாக, முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் கபில்தேவ் 5,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளை எடுத்த ஒரே இந்தியர் எனும் சாதனையை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்தமாக இந்த மைல்கல்லை எட்டிய 11வது வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
ஜடேஜா கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
ஜடேஜா இப்போது 298 சர்வதேச போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளுடன் 5,527 ரன்களை எடுத்துள்ளார். இதில் டெஸ்டில் மட்டும் அவர் 63 போட்டிகளில் 2,623 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டெஸ்டில் 263 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 2,447 ரன்களை எடுத்துள்ளதோடு, 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் டி20 போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணிக்காக 64 போட்டிகளில் 457 ரன்களும் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு சுருண்டது. மேலும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது.