புஜாராவின் பேட்டிங் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மோசமாக உள்ள நிலையில், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புஜாராவை கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி நல்ல பார்மில் உள்ள மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸில் வெறும் 14 ரன்களில் கேமரூன் கிரீன் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். இதேபோல் சமீபத்தில் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய ஷுப்மன் கில்லும் 13 ரன்களில் ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் போலடாகி வெளியேறினார்.
முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம்
சேதேஷ்வர் புஜாரா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அவுட்டான விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இவர்களுக்கு ஆஃப் ஸ்டம்ப் எங்கே என்று தெரிந்துகொள்வதைப் பற்றி கவலையில்லை. ஷுப்மான் கில் தனது கால்தடத்தில் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறார். அவர் இளையவர் என்பதால் இன்னும் காலம் உள்ளது. விரைவில் கற்றுக்கொள்வார். ஆனால் புஜாரா மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆஃப் ஸ்டம்பின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்." என்று கூறினார். இதற்கிடையே மூன்றாம் நாள் (ஜூன் 9) தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அஜிங்க்யா ரஹானேவும், ஷர்துல் தாக்கூரும் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.