
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான்
செய்தி முன்னோட்டம்
2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களை (ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ்) தாக்கிய நிலநடுக்கம் ஏற்படுத்திய சோகமான விளைவுகளைப் பற்றி நான் அறிந்து வருத்தமடைந்து உள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது ஒருநாள் உலகக்கோப்பை போட்டி கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன்.
விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க, நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
Rashid Khan donates match fees to afghan earthquake affected people
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (அக்டோபர் 7) 6.3 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான ஹெராட் நகருக்கு வடமேற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மற்றும் இதைத் தொடர்ந்து அதிக ரிக்டர் அளவில் எட்டுமுறை குலுங்கியது.
இது சேதத்தை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்கள் உதவி கோரியுள்ளனர்.
இது சமீபத்தில் ஆப்கானிஸ்தான் எதிர்கொண்ட இரண்டாவது மோசமான நிலநடுக்கமாகும். முன்னதாக 2022இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.