இளையோர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த ராஜ்குமாரி லஞ்சென்பி சானு: இந்தியாவுக்கு முதல் வுஷு பதக்கம்
செய்தி முன்னோட்டம்
செனகல் நாட்டின் தலைநகர் டக்காரில் நடைபெற்று வரும் 2026 இளையோர் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை ராஜ்குமாரி லஞ்சென்பி சானு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மகளிர் சாங்குவான் ஒருங்கிணைந்த வுஷு தவுலு பிரிவில் களமிறங்கிய அவர், குன்ஷு பிரிவில் 8.723 மற்றும் சாங்குவான் பிரிவில் 9.316 என ஒட்டுமொத்தமாக 18.039 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் நிகழ்வு ஒன்றில் வுஷு விளையாட்டில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்ற வீராங்கனை என்ற புதிய பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பதக்கப் பட்டியல் விவரம்
புள்ளிப்பட்டியலில் முன்னேறிய சானு
இப்போட்டியில் எகிப்து வீராங்கனை சோண்டோஸ் சோன்போல் 18.660 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், வெனிசுலா வீராங்கனை வலேரியா டூடாமெல் அல்வராடோ 18.199 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
குன்ஷு சுற்றின் முடிவில் நான்காவது இடத்தில் இருந்த சானு, அடுத்த சுற்றில் நேர்த்தியான சாகச அசைவுகளை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்க நிலைக்கு முன்னேறினார்.
இளையோர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே வுஷு விளையாட்டு பதக்கப் பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
நடப்பு தொடரில் நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு மற்றும் ஜூடோ வீராங்கனை குஷ்பு ஆகியோர் பதக்கம் வென்ற நிலையில், சானு வென்றது இந்தியாவின் 3-வது பதக்கமாகும்.
பெருமை
மணிப்பூரிலிருந்து உலக மேடை
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி லஞ்சென்பி சானு, கடந்த 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நாமக்கல்லில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று கவனம் ஈர்த்தார்.
பின்னர் 2026 மார்ச் மாதம் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த உலக ஜூனியர் வுஷு சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளையோர் ஒலிம்பிக் தொடரில், 11 விளையாட்டுகளில் பங்கேற்க 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி சென்றுள்ள சூழலில், சானுவின் இந்த வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.