ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை : ரஹ்மானுல்லா குர்பாஸ் சாதனை
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் ஒன்பதாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். மேலும் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரிங்கு சிங் அபாரமாக விளையாடி ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ஆக உயர்த்தினர். 205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி வருண் சக்ரவர்த்தி மற்றும் சுயஸ் சர்மாவின் அபார பந்துவீச்சில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல்லில் அரைசதம் விளாசிய முதல் ஆப்கான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஆர்சிபிக்கு எதிராக 44 பந்துகளை எதிர்கொண்ட ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்தார். ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களில் குர்பாஸும் ஒருவர். கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸிடம் இருந்த ரஹ்மானுல்லா குர்பாஸை கேகேஆர் வர்த்தகம் மூலம் கைப்பற்றியிருந்தது. குர்பாஸ் 126 டி20 போட்டிகளில் விளையாடி 3,100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவர் ஸ்டிரைக் ரேட் 150க்கு மேல் உள்ளது. குர்பாஸ் தற்போது டி20 இல் ஒரு சதம் மற்றும் 20 அரை சதங்கள் அடித்துள்ளார்.